மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் அப்டேட்!

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் சிறப்பு தகவலை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-11-19 13:14 GMT

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் 'சூது கவ்வும் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

'சூது கவ்வும் ' படத்தின் பின்னணி இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது 'சட்டன் டிலைட்' என்ற இசை. இதனை தனியாகவும் யூ-டியூப் தளத்தில் வெளியிட்டது படக்குழு. இதன் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து சில பின்னணி இசைக்கோர்ப்புகளை இதில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கு 'சூது கவ்வும்' படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ள இசை நிறுவனம் கோடிகளில் பணம் கேட்டிருக்கிறார்கள். இதனை சி.வி.குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து சி.வி.குமார், "எண்ட சூதுகவ்வும் படத்தோட ஹிட் தீம் மியூசிக் 'சட்டன் டிலைட்'-அ எண்ட சூதுகவ்வும் 2 படத்திலயே யூஸ் பண்ண முடியல.. காப்பிரைட்க்கு கோடில கேட்டாக ஆடியோ கம்பேனி… நாமளும் கடவுளோட கோர்ட்டுக்கு அந்த கம்பேனிய இழுக்கலாமா?" என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். 'சூது கவ்வும்' படத்தின் தயாரிப்பாளரே அந்த இசையை 2-ம் பாகத்துக்கு உபயோகப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு தகவலை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்