'சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்' - சல்மான் கான்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என நடிகர் சல்மான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2024-08-28 13:48 GMT

மும்பை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல விதமான விநாயகர் சிலைகளின் விற்பனை தொடங்கியுள்ளது. அதே சமயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தூய்மையான விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை வலியுறுத்தும் வகையில் மும்பை மாநகராட்சி, மும்பை காவல்துறை மற்றும் திக்விஜய் அறக்கட்டளை சார்பில் மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை சோனாலி பிந்த்ரே, அம்ருதா பட்னாவிஸ், சோனு நிகம், கைலாஷ் கேர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் கான், "விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது, அந்த சிலைகளின் உடைந்த பகுதிகள் எல்லா இடங்களில் சிதறிக் கிடப்பதை பார்த்திருக்கிறோம். அவ்வாறு நடைபெறாமல் நாம் தடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை நாம் கொண்டாட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை நாம் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பேப்பர், பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்றவற்றை தெருக்களில் வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும். சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு வரும்போது குப்பைகளை வீசுகிறார்கள்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்