கன்னட இயக்குநர் குருபிரசாத் தற்கொலை
பெங்களூருவில் தூக்கில் தொங்கிய நிலையில் கன்னட இயக்குநர் குருபிரசாத்தின் சிதைந்த உடலை மீட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு ,
கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006ம் ஆண்டில் மாதா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் 'எட்டேலு மஞ்சுநாதா' திரைப்படம் 2009ம் ஆண்டின் கர்நாடக மாநில திரைப்பட விருதினைப் பெற்றது. ஆனால், 2024ம் ஆண்டில் வெளியான ரங்கநாயகா படம் வசூலில் பெரும் சரிவைக் கண்டது. இவர் 2014ம் ஆண்டு கன்னட பிக் பாஸ் 2-ம் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, அண்மையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், இன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்குள் சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது, வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் குருபிரசாத்தின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரங்கநாயகா படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நிதிச் சுமை, மன அழுத்தம் காரணமாக குருபிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, நவம்பர் 2ம் தேதியில் அவருக்கு 52வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குருபிரசாத்தின் உயிரிழப்புக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.