ஜப்பானில் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 'தேவரா'
ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த தேவரா தற்போது ஜப்பானில் வெளியாக உள்ளது.
சென்னை,
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ஜூனியர் என்டிஆரின் 30-வது படமும், ஜான்வி கபூரின் முதல் தெலுங்கு படமுமான 'தேவரா பாகம்-1' கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.172 கோடி வசூல் செய்தது.
இறுதியில் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தற்போது ஜப்பானிலும் வெளியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி துவங்குகிறது.
ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆரின் புகழ் ஜப்பானில் மேலும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.