சினிமா விமர்சனம் - கமலின் 'இந்தியன் 2'
'இந்தியன் 2' திரைப்படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது இவர், இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் போன்றோர் நடித்திருக்கின்றனர்.
இந்தியன் 2 திரைப்படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது. தற்போது 'இந்தியன் 2' படம் எப்படி உள்ளது, அதன் நிறை குறைகளை காணலாம்.
சினிமா விமர்சனம்:
நடிகர் சித்தார்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி அதில், ஊழலால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்புகிளம்ப சமூக வலைதளம் வழியாக இந்தியன் தாத்தாவான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அதன்படி வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் கமல் லஞ்சம் ஊழலை வீட்டில் இருந்தே எதிர்க்க இளைஞர்களையும் தூண்டி விடுகிறார். கமல் பிடியிலிருந்து ஊழல்வாதிகளால் தப்பிக்க முடிந்ததா? காவல்துறையால் கமலை பிடிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.
எப்போதும்போல தனது நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார் கமல்ஹாசன். தலைமுடியை ஸ்டைலாக ஒதுக்குவது, தீயவர்களை அழிக்க இரு விரல்களை உயர்த்துவது என கமல் தன் நடிப்பை காண்பிக்கும்போது தியேட்டரில் ஆரவார சத்தம்.
அநீதிக்கு எதிராக பொங்குவது, அம்மாவின் இழப்பை தாங்க முடியாமல் தவிப்பது என தன் பங்கிற்கு பலம் சேர்த்திருக்கிறார் சித்தார்த். போலீஸ் அதிகாரியாக வரும் பாபி சிம்ஹா தனது கதாபாத்திரத்திற்கு நேர்மை சேர்த்துள்ளார். ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் தங்களது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ஜெகன், ரேணுகா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரை மீண்டும் திரையில் பார்ப்பது பரவசம்
அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், மிகச் சிறப்பாக இருக்கின்றன. சில லாஜிக் மீறல்கள் உள்ளன. ஊழல் வீட்டுக்கும் நாட்டுக்கும் எவ்வளவு கேடு என்பதையும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள பொறுப்பையும் கடமையையும் மீண்டும் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.