'மக்கள் என் நிறத்தை பார்க்காமல் நடிப்பை பார்த்ததில் மகிழ்ச்சி' - நடிகை அஷ்வினி அம்ப்ரிஷ்
மக்கள் தன்னை கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகத்தில் இருந்ததாக அஷ்வினி அம்ப்ரிஷ் கூறினார்.
சென்னை,
கன்னட சினிமாவில் அறிமுகமாகியுள்ள நடிகை, அஸ்வினி அம்ப்ரிஷ். இவர் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 9-ஆம் தேதி விஜய் குமார் இயக்கத்தில் வெளியான பீமா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில், துனியா விஜய் கதாநாயகனாக நடிக்க பிளாக் டிராகன் மஞ்சு, கிலி கிலி சந்துரு, ரங்கயான ரகு, அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே மற்றும் ரமேஷ் இந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இப்படத்தில் நடித்ததற்காக நடிகை அஷ்வினி அம்ப்ரிஷ் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அஷ்வினி, மக்கள் தன்னை கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகத்தில் இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"ஒரு புதுமுக நடிகைக்கு இது ஒரு சிறந்த வரவேற்பு. சமூக வலைதளங்களில் பார்வையாளர்களிடம் இருந்து வரும் கருத்துகள் எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு. அது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிறத்தின் காரணமாக கன்னட சினிமாவில் மக்கள் என்னை கதாநாயகியாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் படம் வெளியானவுடன், அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. மக்கள் எனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், என் நிறத்தில் அல்ல. இது எனக்கு நம்பிக்கையை அளித்தது' என்றார்.