மீண்டும் மலையாள படத்தில் இசையமைக்க தயார் - இளையராஜா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 6-ந் தேதியில் இருந்து வருகிற 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டார். அங்கு 'புகழ் பெற்ற இசைக்கலைஞர் இளையராஜாவின் இசை பயணம்' என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
மலையாள திரையுலகில் இருந்து அழைப்பு விடுத்தால் தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் புதிய இசையமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கும்போது, "அவர்கள் தங்களுக்கென தனி வழியை கண்டறிந்தே அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.