எனக்கு பொறாமையா இருக்கு - சொர்க்கவாசல் படம் குறித்து பேசிய செல்வராகவன்

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-11-26 02:04 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பிறகு, '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம்' போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து சொர்க்கவாசல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், நட்டி நட்ராஜ் , சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

இந்த 'சொர்க்கவாசல்' திரைப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படமானது முழுக்க மத்திய சிறைச்சாலையில் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டீசர், டிரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்தநிலையில் செல்வராகவன், சொர்க்கவாசல் படம் குறித்து பேசியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

அதாவது, "படத்தின் முழு கதையை ஆரம்பத்திலேயே எனக்கு கொடுத்து விட்டார்கள். அதை நான் படித்துப் பார்த்துவிட்டு 20-வது முறையாவது இயக்குனரிடம் நீங்கள் தான் இதை எழுதினீர்களா? என்று கேட்டேன். இது போன்ற ஒரு கதையை எழுதுவது ரொம்ப கஷ்டம். எனக்கு பொறாமையாக இருக்கு, இதுபோன்ற ஒரு படத்தை என்னால் எடுக்க முடியவில்லை என்று. ஜெயிலில் நடப்பது போன்று நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் இது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்