'எக்ஸ்டிரீம்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 3-ந் தேதி வெளியான 'எக்ஸ்டிரீம்' படம் மர்மம் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.;
சென்னை,
பிழை, தூவல் படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள படம், 'எக்ஸ்ட்ரீம்'. இதில் பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் உட்பட பலர் நடித்துள்ளனர். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரித்துள்ளனர். சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் செய்யும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண் தான், அதற்குத் தீர்வு காண்பதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், பிக்பாஸ் ரச்சிதா நடித்துள்ள 'எக்ஸ்டிரீம்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் பணியாளர்கள் ஒரு இளம் பெண்ணின் பிணத்தை பார்த்து அதிர்கின்றனர். அந்த சடலத்தை போலீசார் மீட்டு விசாரணையை தொடங்குகின்றனர். அந்த பெண் வீட்டு வேலைகள் செய்து வந்தது தெரிய வருகிறது. காதல் ஜோடி, போதைப்பொருள் கும்பல், குடியிருப்பு வாசிகள் என்று பல கட்ட விசாரணைகள் செய்தும் கொலையாளியை நெருங்க முடியவில்லை.
இதனால் கொலையை விசாரிக்கும் பொறுப்பை போலீஸ் அதிகாரி ரச்சிதா மகாலட்சுமியிடம் உயர் அதிகாரி ஒப்படைக்கிறார். அவரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததா? கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன? என்பது மீதி கதை.
போலீஸ் அதிகாரியாக அழகும் கம்பீரமுமாக வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. கோபம், அதிர்ச்சி, விரக்தி, நெகிழ்ச்சி என உணர்வுகளை முகத்தில் துல்லியமாக கடத்தி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. குடும்ப பிரச்சினை, பணிச்சுமைக்கு மத்தியில் போலீஸ் வேலையை கச்சிதமாக செய்யும் நாகராஜ் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
அபி நக் ஷத்திரா ஏழ்மை ஏக்கங்களை மெல்லிய உணர்வுகளால் வெளிப்படுத்தி இருக்கிறார். முடிவு பரிதாபம். அமிர்தா ஹல்டர் கவர்ச்சியில் தாராளம். ஆனந்த் நாக், சிவம் தேவ், ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர், ஜெயராஜ், கமலாத்மிகா ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நேர்த்தி.
நெடிய விசாரணை சிறிய தொய்வை கொடுத்தாலும் அழுத்தமான கதையோட்டம் ஒன்ற செய்கிறது. டி.ஜே.பாலா ஒளிப்பதிவு, ராஜ்பிரதாப் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
நாகரிக உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மர்மம், திரில்லர் என்று விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.