'அலங்கு' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் வெளியான அலங்கு திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.;
எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `அலங்கு'. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ள இப்படம், தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், 'அலங்கு' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
நாயகன் குணாநிதி ஒரு நாயை செல்லமாக வளர்க்கிறார். கேரளாவுக்கு நண்பர்களுடன் வேலைக்கு செல்லும்போது நாயையும் அழைத்து செல்கிறார். அங்கு செம்பொன் வினோத் மகளை ஒரு நாய் கடித்துவிட சரத் அப்பானியை வைத்து ஊரில் உள்ள நாய்களையெல்லாம் கொன்று குவிக்கிறார். இதில் குணாநிதியின் நாயும் சிக்கிக்கொள்கிறது.
அந்த நாயை காப்பாற்ற நடக்கும் முயற்சியில் குணாநிதிக்கும், வில்லனுக்கும் மோதல் வருகிறது. நாயுடன் காட்டு வழியாக தப்பிக்க குணாநிதி முடிவு செய்கிறார். அந்த சாகச பயணத்தில் குணாநிதி சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? தன்னுடைய வளர்ப்பு நாயை அவரால் காப்பாற்ற முடிந்ததா? நாய் தன்னை கொல்ல வந்தவர்களுக்கு பதிலடி கொடுத்தாரா? என்பது மீதி கதை.
மலை வாழ் இளைஞனாக வரும் குணாநிதி தனது கதாபாத்திரத்துக்கான அனைத்து நியாயத்தையும் இயல்பான நடிப்பின் வழியாக செய்திருக்கிறார். கல்லூரி வாழ்க்கை நிராகரிப்படும்போது முகத்தில் வெளிப்படுத்தும் இயலாமை, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத கோபம், நாய் மீது காட்டும் அபரிதமான அன்பு, நாயை காப்பாற்றும் போராட்டம் என சீறும் வேங்கையாக அமர்க்களப்படுத்துகிறார்.
காளி வெங்கட் இளைஞர்களுக்கு பாதுகாவலனாக இருந்து காண்பிக்கும் பரிவும், பாசமும் நெகிழ்ச்சி. செம்பன் வினோத்தின் முகத்தில் தாண்டவமாடும் வில்லத்தனம் பயத்தை தருகிறது. அம்மாவாக வரும் ஸ்ரீரேகாவுக்கு வலுவான வேடம். அதை அவரும் உணர்ந்து பட்டையை கிளப்பியுள்ளார். சண்முகம் முத்துசாமி, கொற்றவை, ரெஜின் ரோஸ், சரத் அப்பானி கதாபாத்திரங்களில் நிறைவு. காளியாக வரும் நாய் ஆச்சரியப்பட வைக்கிறது. யானை தொடங்கி நாய், பாம்பு வரை காண்பிக்கப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
அஜீஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு தேவையான பலத்தை சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் வனப்பகுதியின் செழிப்பையும், கதை மாந்தர்களையும் யதார்த்தமாக காண்பித்து கவனம் ஈர்க்கிறார். நாய்க்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளை கூடுதலாக சேர்த்திருக்கலாம். மனிதர்களுக்கும், நாய்களுக்கும் உள்ள உறவை அழுத்தமான திரைக்கதையில் சுவாரசியமாக சொல்லி கவனம் பெறுகிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.