மதம் மாறிவிட்டேனா? - நடிகை பிரியாமணி விளக்கம்

மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தையும் முன்னிட்டு மதம் மாற மாட்டேன் என்று நடிகை பிரியாமணி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-10-07 11:18 GMT

நடிகை பிரியாமணி ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் கடந்த 2007ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். அதை தொடர்ந்து மலைக்கோட்டை, ராவணன், சாருலதா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய்யின் கடைசிப் படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்

2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவராக இருந்ததால் சில சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில், பிரியா மணி சமீபத்தில் அளித்த பேட்டியில், " நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் மதம் மாறிவிட்டேன் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்றும், நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். ரம்ஜானுக்கு நான் வாழ்த்து தெரிவித்த போது, மதம் மாறிவிட்டதாக சொன்னார்கள். நான் மதம் மாற மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் தெரிவித்து விட்டேன். நான் இந்து மதத்தில் பிறந்தவர் என்பதால் எப்போதும் என் நம்பிக்கையை பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், அவரவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்றும் தெரிவித்தார்

மேலும், நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் எனக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்றும் எனக்கு சிலர் மெசேஜ் அனுப்பி உள்ளனர்; அது என்னை மிகவும் பாதித்துள்ளது. ஜாதி மதத்தை மீறி திருமணம் செய்து கொண்ட பலர், மத வேறுபாடு இன்றி ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு காட்டப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை என்றும் பிரியாமணி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்