விஜய்யின் 'தி கோட்' படம் : 5 நாட்களில் ரூ.300 கோடி வசூல்!
விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் 5 நாட்களில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்திருந்தது.
விஜய்யின் கோட் வசூல் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நல்ல வசூலை பெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை ஐந்தாவது நாள் வேலை நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகத் தான் வசூல் செய்திருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை கோட் படம் நெருங்கி இருப்பது படக்குழு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்முறையாக வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் வித்தியாசமான ஒரு படமாக தான் கோட் படம் வெளியாகி இருந்தது.
முதல் நாள் கோட் படம் 29.50 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்து வெள்ளிக்கிழமை 21.50 கோடி மட்டுமே வசூல் செய்தது. சனிக்கிழமை 27 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 28 கோடியும் வசூலை அள்ளியது. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 106 கோடி வசூலை பெற்றது. நேற்றைய தினம் வேலை நாள் என்பதால் தியேட்டரில் 58 சதவீத இருக்கைகள் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐந்தாவது நாளில் 14 கோடி வசூலை கோட் படம் ஈட்டியது.
'தி கோட்' திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் 288 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. திரைப்படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதோடு ஐந்தாவது நாளில் 300 கோடி வசூலில் 'தி கோட்' படம் இணைந்திருக்கிறது. அடுத்த மாதம் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகும் வரை ஓரளவு தியேட்டரில் 'தி கோட்' படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.