'பில்லா' முதல் 'பணக்காரன்' வரை - ரஜினிகாந்த் நடித்த ரீமேக் படங்கள்

அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

Update: 2024-09-20 06:16 GMT

சென்னை,

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினி தோன்றியிருந்தார். இந்தப் படம் உள்பட இவர் ஆரம்பத்தில் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாகவே தோன்றியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, 1980-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் 'டான்' படத்தின் ரீமேக்கான 'பில்லா' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து பாராட்டப்பட்டார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ரீமேக் ஆன அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்து தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தை நம்பர் ஒன் நட்சத்திரமாக நிலைநிறுத்தியது.

அந்தவகையில், அமிதாப்பச்சனின் 'அமர் அக்பர் அந்தோணி'யின் ரீமேக்கான 'ராம் ராபர்ட் ரஹீம்' படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அதனைத்தொடர்ந்து, தீவாரின் ரீமேக்கான தீ, குத்-தாரின் ரீமேக்கான படிக்காதவன், நமக் ஹலால் படத்தின் ரீமேக்கான வேலைக்காரன், 1978-ம் ஆண்டு வெளியான காஸ்மே வாதே படத்தின் ரீமேக்கான தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர் பெரிய இடைவெளிக்கு பிறகு அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற லாவாரிஸ் படத்தை அடிப்படையாகக் கொண்டு 1990-ம் ஆண்டு வெளியான 'பணக்காரன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். தற்போது, ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் 'வேட்டையன்' படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்