இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம் - இயக்குநர் பாலா

படம் எடுப்பவர்களை விட படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அதிகம் தெரியும் என்றும், அவர்களை நம்மால் ஏமாற்றிவிட முடியாது என்றும் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-12-30 12:19 GMT

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், 'வணங்கான்' படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அதில் இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

அப்பேட்டியில் இப்போதைய ரசிகர்களின் மனநிலை குறித்த கேள்விக்கு பாலா, "பாலு மகேந்திரா சாரிடம் நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், ஒருவனுக்கு பசி என்றால் வாழைப்பழம் கொடு. உரிச்சி திங்க முடியாதவன் என்றால் உரிச்சிக் கொடு. அதை விட்டுவிட்டு ஏன் வாழைப்பழத்தை ஊட்டி விடுற, அது அவனுடைய வேலை என்பார். இயக்குநர்கள் 10 அல்லது 15 படம் இயக்குகிறார்கள். ஆனால் ரசிகர்கள் நூற்றுக்கணக்கான படங்கள் பார்க்கிறார்கள். ஆகையால் இயக்குநர்களை விட ரசிகர்களுக்குதான் அறிவு அதிகம். அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. நீ திரையில் சொல்லு. நான் புரிந்துகொள்கிறேன் என்பது தான் அவர்களுடைய பாணி. அதேபோல் குச்சி எடுத்துக் கொண்டு படத்தில் வகுப்பு எடுக்கவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை படம் எடுப்பது உன் வேலை, அதை நாங்கள் புரிந்துகொள்வோம் என்பதுதான் அவர்களது எண்ணம். அந்த அகம்பாவம் அனைத்து ரசிகர்களுக்குமே இருக்கிறது. அது நல்லதும் கூட" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்