என் அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் - டிராகன் இயக்குனர்
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படங்கள் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.;

சென்னை,
.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நாயகியாக அறிமுகமான கயாது லோஹர் இந்தப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், அனுபமா, மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலரும் நடித்திருந்தனர். இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.டிராகன் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
டிராகன் படம் வெளியாவதற்கு முன்பு 'காட் ஆப் லவ்' என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவிருப்பதாக அஷ்வத் மாரிமுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். டிராகன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அந்தப் படத்தின் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தன. அதில், சிலம்பரசன் படத்திற்குப் பின்னர் ஏஜிஎஸ் தயாரிப்பில் மீண்டும் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம், கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தனுஷுடன் ஒரு படம் என அவர் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவ்வாறு வதந்திகளைப் பரப்பவேண்டாம் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "என்னுடைய அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்பவேண்டாம். அவ்வாறு ஏதேனும் இருந்தால் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன்" என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.