இரவு 9 மணிக்கு மேல என்னால தூங்காம இருக்க முடியாது - நடிகை சாய் பல்லவி
அதிகாலை 4 மணிக்கு எழுவதால் இரவில் 9 மணிக்கு தூங்கிவிடுவேன் என்று நடிகை சாய்பல்லவி சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.;

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார். தற்போது, இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி இயக்குநர்களும் சாய் பல்லவிக்கு கதை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் நடந்த நேர்காணலில் தனது அன்றாட வாழ்க்கை பற்றி அளித்த சுவாரசியமான பேட்டியில் "நான் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருந்த போது அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் அப்படியே பழகி விட்டது. 4 மணிக்கு மேல் நானே தூங்க முயற்சி செய்தாலும் என்னால் தூங்க முடியாது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என்னுடைய அன்றாட பணிகளை தொடங்கி விடுவேன். அது போல் பல படப்பிடிப்புகள் இரவு முழுவதும் படமாக்கப்படுகிறது. என்னால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது. இதை பார்த்து இயக்குனர்கள் பலர் என்னை சின்ன குழந்தை என்று சொல்வார்கள். இரவு நேர சூட்டிங்கே எனக்கு பிரச்சினைதான். ஆனாலும் எப்படியாவது அடம்பிடித்து இரவு 9 மணிக்கு தூங்கி விடுவேன்" என கூறியுள்ளார்.