'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குனர் வெற்றிமாறன்

நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போல உணர்ந்தேன் என்று 'லப்பர் பந்து' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.

Update: 2024-09-21 16:14 GMT

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார். பின்பு சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் ஆகியோர் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கு வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல பொழுதுபோக்கு படம். ரைட்டர், டைரக்டர், கேமராமேன், நடிகர்கள் என எல்லாருமே அவுங்கவுங்க வேலையை அவ்ளோ அழகா பண்ணியிருக்காங்க. படத்தை பார்க்கும் போது, நான் எங்க ஊர்ல கிரிக்கெட் டீம் நடத்துன விஷயங்கள், அதில் சந்தித்த மனிதர்கள் எல்லாம் நியாபகத்துக்கு வந்தாங்க. நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போலத்தான். ஒரு கிராமத்தில் வளர்ந்தவர்களையும் கிரிக்கெட்டை விரும்பி பார்க்குறவங்களையும் என எல்லாருக்குமே இந்த படம் புடிக்கும். அதையும் தாண்டி ஒரு குடும்பத்தில் இருக்கும் முக்கியமான விஷயங்களையும் இந்தப் படம் பேசுகிறது. உண்மையிலே நான் ரொம்ப என்ஜாய் பன்னி பார்த்தேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்