'விவாகரத்துக்கு இது காரணம் இல்லை' - சந்தன் ஷெட்டி

விவாகரத்து பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நிவேதிதா கவுடா கூறினார்.

Update: 2024-06-11 03:21 GMT

பெங்களூரு,

கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின்போது காதலில் விழுந்த பாடகர் சந்தன் ஷெட்டி-நடிகை நிவேதிதா கவுடா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் கோர்ட்டு மூலம் கடந்த வாரம் விவாகரத்து பெற்றனர். அவர்களின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில் பிரிந்த தம்பதி சந்தன் ஷெட்டி-நிவேதிதா ஆகியோர் பெங்களூருவில் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது சந்தன் ஷெட்டி கூறியதாவது:-

எங்களின் திருமண வாழ்க்கையில் எனது சிந்தனைகளும், நிவேதிதா சிந்தனைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ தீவிரமாக முயற்சி செய்தோம். ஆனால் அது சாத்தியமாகவில்லை. நாங்கள் இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விவாகரத்து பெற்றோம். மனக்கசப்புகளை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது மிக கடினம். அது சாத்தியமில்லை. அதனால் நாங்கள் ஒருமனதாக முடிவு செய்து விவாகரத்து பெற்றோம். எங்களிடையே எந்த வெறுப்பும் இல்லை.

நான் நிவேதிதாவுக்கு ஜீவனாம்சம் கொடுத்ததாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். நான் எந்த விதமான ஜீவனாம்சமும் அவருக்கு வழங்கவில்லை. ஜீவனாம்சம் வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. குழந்தை பெற்றுக் கொள்ள நிவேதிதா ஒப்புக்கொள்ளவில்லை என்று இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. எங்களின் விவாகரத்துக்கு இது காரணம் இல்லை. நிவேதிதா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் விவாகரத்து பெற்றதாக சொல்கிறார்கள். அதுவும் தவறு. இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடுவதை கண்டு நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம். தயவு செய்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். நாங்கள் மகிழ்ச்சியுடன் தான் பிரிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை நிவேதிதா கவுடா கூறுகையில், "எங்களின் விவாகரத்து குறித்து வரும் தகவல்கள் என்னை காயப்படுத்தியுள்ளன. வதந்திகள் எங்களின் குடும்பத்தில் வேதனையை உண்டாக்கியுள்ளது. தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். நாங்கள் தொடர்ந்து எங்களின் பணிகளில் கவனம் செலுத்துவோம். இருவரின் சிந்தனைகள் இசைந்து போகாததால் விவாகரத்து பெற்றோம். எங்களின் விவாகரத்து பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்