'நந்தன்' திரைப்படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

'நந்தன்' திரைப்படத்தை பாராட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-10-16 14:39 GMT

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக தெரிவித்துள்ளது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில், 'நந்தன்' திரைப்படத்தை பாராட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்