மதுரை கோயிலுக்குள் செல்ல இந்து சான்றிதழ் கேட்டு மனதை புண்படுத்தியதாக நடிகை நமீதா குற்றச்சாட்டு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி நடிகை நமீதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Update: 2024-08-26 09:59 GMT

மதுரை,

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். விஜய், அஜித், சரத் குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் பா.ஜ.க கட்சியில் இணைந்தார். இவர் 2017ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று நமீதா தனது கணவருடன் தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

'நான் ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும், என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ், என கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது. நான் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன், இந்தியாவில் எந்த கோவிலிலும் இது போன்று தன்னிடம் இந்த கேள்வியை கேட்டது இல்லை.' என நடிகை நமீதா கூறியுள்ளார்.

மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி நடிகை நமீதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்