மறைந்த இயக்குனர் ஷியாம் பெனகலை புகழ்ந்த நடிகர் கமல்ஹாசன்

ஷியாம் பெனகல் மறைவுக்கு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-12-24 06:53 GMT

Image Courtesy; Twitter@Kamal Haasan

மும்பை,

திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஷியாம் பெனகல். இவர் இயக்கிய 'அங்கூர்' படம் இந்திய சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார். புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியாவின் தலைவராக இருந்தார்.

'எ சைல்ட் ஆப் தி ஸ்ட்ரீட்ஸ்', 'ஜவஹர்லால் நேரு', 'சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். வங்காள தேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை 'முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்' என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இவர் வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், ஷியாம் பெனகலை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'நம் காலத்தின் மனிதாபிமான கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது படங்களின் மூலம், உண்மையான இந்தியாவை திரைக்கு கொண்டு வந்து, ஆழ்ந்த சமூக விஷயங்களைக் கையாண்டு சாதாரண மக்களை நேசிக்கச் செய்தவர் ஷியாம் பெனகல். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கலையை போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்