திரைத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு - சிம்புவின் 'சிலம்பாட்டம்' ரீ-ரிலீஸ்

நடிகர் சிம்பு திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.

Update: 2024-11-23 11:31 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் அவரின் மகனாக சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார். தனது தந்தை இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிம்பு தற்போது சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.

காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடங்கி கடைசியாக 'தக் லைப்' வரை நடித்துள்ளார்.

சிம்பு திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதை தொடர்ந்து இதனை கொண்டாடும் விதமாக இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் சிம்பு நடித்திருந்த சிலம்பாட்டம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.


கடந்த 2008 ம் ஆண்டு சிம்பு நடிப்பில் சிலம்பாட்டம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சூரிய வம்சம், பூவே உனக்காக, சங்கமம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எஸ். சரவணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்பு அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அப்பா சிம்புவிற்கு ஜோடியாக சினேகாவும் மகன் சிம்புவிற்கு ஜோடியாக சனாகானும் நடித்திருந்தனர்.மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே மீண்டும் இந்த படம் சிம்புவின் 40 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் நடிகர் சிம்பு அடுத்தது அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்