மும்பை, மராட்டியத்தில் மொத்தமுள்ள 288... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதேபோல், ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது.

ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.

வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 13 மாநிலங்களுக்கு உள்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Update: 2024-11-23 02:37 GMT

Linked news