இஸ்ரேல் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் -... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - காசாவுக்கு ரூ.832 கோடி நிதியுதவி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்வார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதன்படி ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேட்டன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
காசாவுக்கு ரூ.832 கோடி நிதியுதவி
அப்போது ஜோ பைடன் பேசுகையில், “நேற்று காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது, நீங்கள் (இஸ்ரேல்) அல்ல” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு எளிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். தீமைகள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும்.
உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. மேலும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார்.
ஜோ பைடனின் சந்திப்பு ரத்து
அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்கு பெஞ்சமின் நேட்டன்யாகு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என விவரித்தார். மேலும் இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே போரில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைக்கோர ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாட்டை நடத்த இருந்தார்.
ஆனால், காசா ஆஸ்பத்திரி மீது நடந்த குண்டுவீச்சின் காரணமாக ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதை ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மன் சபாதி தெரிவித்தார்.
போர்க்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா
இதனிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் மேலும் சில போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கப்பல்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்துக்கு அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.