இந்தியா இன்று பங்கேற்கும் ஆட்டங்கள்
கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் இன்றே ஆரம்பமாகின்றன. ஆசிய போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி சி பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது. நாளை தென் கொரிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
இந்திய ஆடவர் வாலிபால் அணி இதுவரை ஆசிய போட்டிகளில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் 4 சிறந்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை சந்திக்கிறது.
இந்திய பெண்கள் வாலிபால் அணிக்கான முதல் லீக் ஆட்டம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வட கொரிய அணியை எதிர்கொள்கிறது.