நிலுவையில் உள்ள மசோதாக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு

மசோதாக்கள் விவகாரத்தில் முதல்-அமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணுமாறு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

Update: 2023-12-13 07:26 GMT

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 18-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாக்களை கடந்த 19-ம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். ஆனால் காலத்தை வீணடிப்பதற்காகவே கவர்னர் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மசோதாக்கள் விவகாரத்தில் கவர்னர் முதல்-அமைச்சரை அழைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு பேசி தீர்வு காண வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் குறித்து பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். மசோதாக்கள் விவகாரம் குறித்து முதல்-அமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணுமாறு கவர்னரை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய நிலையில் இந்த அழைப்பு கவர்னர் மாளிகை மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புயல், மழை பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வரும் நிலையில், வேறு ஒருநாள் சந்திப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்