பாரீஸ் ஒலிம்பிக்; இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தகுதி சுற்றின் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.
இதையடுத்து தகுதி சுற்றின் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.