ஸ்கோடா நிறுவனம் தனது கொடியாக் மாடல் காரில் மேம்பட்ட ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.37.99 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இது 7 பேர் பயணிக்கும் வகையிலான எஸ்.யு.வி. மாடலாகும். இது பாரத் புகை விதி 2-ம் கட்டத்திற்கு ஏற்ற வகையிலான என்ஜினைக் கொண்டது. வெளிநாட்டிலுள்ள இந்நிறுவன ஆலையிலிருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இந்நிறுவனத்தின் அவுரங்காபாத் ஆலை யில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இது 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 190 ஹெச்.பி. திறனையும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்த 7.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இது 7 கியர்களைக் கொண்ட இரட்டை கிளட்ச் வசதி கொண்டது. நான்கு சக்கர சுழற்சி கொண்டது. பத்திரமான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இதில் 9 ஏர் பேக்குகள் உள்ளன.
இத்துடன் பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிடி கண்ட்ரோல், பன்முக விபத்து தவிர்ப்பு பிரேக் வசதி, பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது. கார் கதவில் கீறல் விழாத வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. உள்புறம் 8 அங்குல தொடு திரை கொண்டது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்டது. இனிய இசையை வழங்க 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.