பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அங்கமான மினி நிறுவனம் சிறியரக கார் தயாரிப்பில் பிரபலமானது. இந்நிறுவனத்தின் மினி கூப்பர் கார்கள் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இந்நிறுவனம் தற்போது மினி கூப்பர் எஸ்.இ. மாடலில் சார்ஜ்டு எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கார்களில் மொத்தமே 20 கார்களைத் தயாரிக்கப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்வோருக்கு வெளிநாட்டிலிருந்து முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது.
சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மேற்கூரை, 17 அங்குல சக்கரத்தில் மெல்லிய மஞ்சள் பெயிண்ட், உள்புறத்தில் கருப்பு நிறம் உள்ளிட்ட பெயிண்ட் காருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ரியர் வியூ மிரர், 8.8 அங்குல தொடு திரை, 5.5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.
இதில் உள்ள மின் மோட்டார் 184 ஹெச்.பி. திறனையும், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதற்கான திறனை 32.6 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி அளிக்கிறது. பேட்டரியில் ஓடக்கூடிய காராக இருப்பினும் இதை ஸ்டார்ட் செய்த 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கி.மீ. ஆகும். இதில் உள்ள பேட்டரியின் 80 சதவீதம் 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.55 லட்சம்.