மாசரெட்டி எம்.சி 20
பந்தயக்கார்கள் மட்டுமின்றி அதிவேகக் கார்களைத் தயாரிக்கும் மாசரெட்டி நிறுவனம் தற்போது மாசரெட்டி எம்.சி 20. என்ற பெயரில் சூப்பர் காரை அறிமுகம் செய்துள்ளது.
இதை ஸ்டார்ட் செய்து 2.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் விலை சுமார் ரூ.3.69 கோடி. இது 630 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் வகையிலான 3 லிட்டர் இரட்டை டர்போ வி 6 என்ஜினைக் கொண்டது. முழுவதும் இந்நிறுவன ஆராய்ச்சி மற்றும் ஆய்வகத்தில் தயாரானது. இது 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். சீறிப் பாய்வதற்கு வசதியாக இதில் அதிக அளவில் கார்பன் பைபர் பாகங்கள் மற்றும் இலகு ரக பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் காரின் எடை 1,500 கிலோவுக்குக் குறைவாக உருவாகியுள்ளது. வாகனத்தின் எடைக்கும் அது வெளிப் படுத்தும் வேகத்திற்குமான விகிதம் ஒரு டன்னுக்கு 420 ஹெச்.பி. என்ற விகிதத்தில் உள்ளது. முந்தைய எம்.சி 12. மாடல் வாகன வடிவமைப்பு மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே வடிவமைப்பில் இதுவும் அதைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஏரோ டைனமிக் வடிவமைப்பு அதிக வேகத்தில் செல்ல உதவுகிறது. வண்ணத்துப் பூச்சி சிறகை விரிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட கதவுகள் அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது. 10 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், கார்பன் பைபரால் சூழப்பட்ட கன்சோல் இதில் உள்ளது. வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதி, இன்போடெயின்மென்ட் கண்ட்ரோல் வசதி கொண்டது.