இந்தியாவில் அறிமுகமாகிறது ஹோண்டா எலிவேட்

Update: 2023-06-15 07:37 GMT

கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது புதிய எஸ்.யு.வி. மாடல் காரை `எலிவேட்' என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நடுத்தர பிரிவு எஸ்.யு.வி. மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமான, வலிமையான முன்புற வடிவமைப்பு, பிரத்யேகமான பின்புற வடிவமைப்பு இந்தக் காருக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மாடல் இங்கிருந்துதான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதில் உயர்திறன் கொண்ட டிரைவர் உதவி நுட்பம் (ஏ.டி.ஏ.எஸ்.) உள்ளது. ஹோண்டா நிறுவனம் அனைத்துப் பயணிகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இந்தக் காரை வடிவமைத்துள்ளது.

முன்புறம் கிரில், மெல்லிய எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புறம் எல்.இ.டி. விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். உறுதியான வெளிப்புற தோற்றம் மற்றும் வடிவமைப்பு, அதிகபட்ச பாதுகாப்பு, மேம்பட்ட சவுகரியம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு இது வடிவமைக்கப்பட்டதாகும். உள்புறம் 7 அங்குல டி.எப்.டி. பன்முக செயல்பாடு கொண்ட திரை உள்ளது. ஏ.எஸ்.வி.எம். எனப்படும் பக்கவாட்டு பகுதி, கண்காணிப்பு உதவி வசதி, பின்புற கண்காணிப்பு பகுதி உள்ளிட்டவை இதில் சிறப்பம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இதில் 1.5 லிட்டர் டி.ஓ.ஹெச்.சி. பெட்ரோல் என்ஜின் பயன் படுத்தப்பட்டுள்ளது. 89 கிலோவாட் திறனையும், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 6 மேனுவல் கியர்களையும், 7 ஆட்டோமேடிக் கியர்களையும் கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), இ.பி.டி. மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியன இதில் உள்ளன.

வெஹிக்கிள் ஸ்டெபிளிடி அசிஸ்ட், ஏஜைல் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹோண்டா லேன் வாட்ச் கேமரா, பாதசாரிகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் இருக்கை வசதி ஆகியன இதில் இடம் பெற்றுள்ளன. 5 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, பின்புற ஷெல்ப், கப், பாட்டில்களை வைக்க இட வசதி, கதவுகளில் இடம், வயர்லெஸ் போன் சார்ஜர், தானாக மூடிக்கொள்ளும் வசதி ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

Tags:    

மேலும் செய்திகள்