பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 1 எஸ் டிரைவ் 18 ஐ எம் ஸ்போர்ட்
ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 1 ஸ்போர்ட்ஸ் செயல்பாடு உடைய காரை (எஸ்.ஏ.வி.) அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சொகுசு மற்றும் பிரீமியம் மாடல் கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 1 ஸ்போர்ட்ஸ் செயல்பாடு உடைய காரை (எஸ்.ஏ.வி.) அறிமுகம் செய்துள்ளது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் இந்தக் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. சொகுசான எஸ்.ஏ.வி. மாடல் கார்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்காக இந்த மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புதிய மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.48,90,000. இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
சில்வர், கருப்பு, சபையர், நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது. கம்பீரமான தோற்ற மளிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. வளைவான திரையுடன் கூடிய டிஸ்பிளே, சொகுசான காக்பிட் போன்ற தோற்றம் கொண்ட டேஷ்போர்டு ஆகியன இதன் சிறப்பம்ச மாகும்.
பயணத்தின்போது சொகுசாக இருக்க இதில் உள்ள இருக்கைகள் உடலுக்கு மசாஜ் தரும் வகையிலான செயல்பாட்டைக் கொண்டவை. இதனால் நீண்ட தூரம் பயணித்தாலும் அலுப்பு தோன்றாது. அதிக அளவில் பொருட்களை வைப்பதற்கான இடவசதி கொண்டது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது.
இதில் இரட்டை சக்தி கொண்ட டர்போ தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இதில் 1,499 சி.சி. திறன் கொண்ட 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 134 ஹெச்.பி. திறனையும் 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 9.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். 7 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. 10.7 அங்குல கண்ட்ரோல் டிஸ்பிளே உள்ளது.
இதில் பி.எம்.டபிள்யூ. ஐ-டிரைவ் செயலி 8 உள்ளது. இதன் மூலம் வாகனத்தை எளிதாகக் கையாள முடியும். தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் கொண்டது. இது மேம்பட்ட ஓட்டும் அனுபவத்தை அளிக்கக் கூடியது. காரை பத்திரமாக பார்க் செய்ய முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமரா, ரியர் வியூ கேமரா, பின்பகுதியை திரையில் முழுமையாகப் பார்க்கும் வசதி ஆகியவற்றை கொண்டது.
பாதுகாப்பு அம்சமாக லேன் மாறுவதை எச்சரிப்பது, குரூயிஸ் கண்ட்ரோல், ஆபத்து காலத்தில் தானியங்கி முறையில் பிரேக் செயல்படுவது உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விபத்து உணர் சென்சார், டியூப்லெஸ் டயர், காற்றழுத்த கண்காணிக்கும் கருவி, குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஐ-சோபிக்ஸ் இருக்கை வசதி உள்ளிட்டவை இதன் சிறம்பம்சமாகும்.