நான்கில் வந்தது குருபகவான்; நலம்பெறக் கவனம் மிகத்தேவை
எது வந்தபோதும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் பெற்ற தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 4-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கிறார். நான்காமிடத்தை 'அர்த்தாஷ்டம ஸ்தானம்' என்பார்கள். குடும்பத்திலும், பொதுவாழ்விலும், ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் தோன்றும் நேரம் இது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். இருப்பினும் குருபகவான் 4-ம் இடத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால், பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு, உங்களின் ராசிநாதனாகவும் இருக்கிறார். அதே சமயம் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவராகவும் விளங்குகிறார். அர்த்தாஷ்டமக் குருவாக இருந்தாலும், அங்கிருந்து அவர் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. உங்கள் ராசிநாதனாகவும் குரு இருப்பதால், கால் பங்கு தொல்லையும், முக்கால் பங்கு நன்மையும் கிடைக்கப்பெறும். நான்காமிடம் என்பது கல்வி, தாய், வாகனம், இடம், பூமி போன்றவற்றை குறிக்கும் இடமாகும். மேலும் அது சுக ஸ்தானமாகவும் உள்ளது. எனவே திடீர், திடீரென ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவானின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சென்ற வருடத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். வருமானம் திருப்தியாக இருந்தாலும் உடனடியாக விரயங்கள் ஏற்பட்டுவிடும். உடல்நலத்தைப் பொறுத்தவரை 'நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் இன்னும் நோய் குணமாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப் போகிறது.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் 'படித்து முடித்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலையும், கைநிறையச் சம்பளமும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாதவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்குகிறது. ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்கக் கூடிய நேரம் இது. குடும்பத்துடன் தல யாத்திரை செல்ல முன்வருவீர்கள். காசி, ராமேஸ்வரம் என புனிதப் பயணங்களுக்குச் சென்று கடலில் நீராடி தெய்வங்களைத் தரிசித்து வரவேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அது நிறைவேறும் காலம் இது.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு பகவான். அவர், பூரட்டாதி நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாறுதல்கள் கிடைக்கும்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், குடும்ப ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சனியின் சாரத்தில் குருபகவான் உலாவரும் பொழுது, குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் இப்பொழுது விரும்பி வந்திணைவர்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ரேவதி நட்சத்திரக் காலில், களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். தடைகள் தானாக விலகும். கரைந்து போன சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். உதிரி வருமானமும் வந்து சேரும்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான், வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் அவர் ராசிநாதன் என்பதால் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய தொல்லை ஏற்படும். திருமண முயற்சியில் தடைகள் உருவாகும். வழக்குகள் சாதகமாக அமைந்தாலும் மீண்டும் புதிய வழக்குகள் தொடரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயர்ச்சி ஓரளவு சாதகமான பெயர்ச்சிதான். என்றாலும் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எந்த முடிவெடுத்தாலும் குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக நற்பலன்கள் கிடைக்க வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருகவசம் பாடி குருவை வழிபடுங்கள். யோகபலம் பெற்ற நாளில் பட்டமங்கலம் சென்று திசைமாறிய தென்முகக்கடவுளையும் வணங்குங்கள்.