22-04-2023 முதல் 01-05-2024 வரை
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
ஐந்தில் வந்தது குருபகவான்! அடுக்கடுக்காக யோகம் வரும்!
எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் 5-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கிருந்து கொண்டு 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப இனி அடுக்கடுக்காக நன்மைகள் உங்களைத் தேடிவரப்போகின்றது. இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்குகளும், வாய்தாக்களும் வந்த வழியே திரும்பிச் செல்லும்.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிநாதனாகவும், சுகாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 5-ம் இடத்தில் இருந்து கொண்டு 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம் தான். குறிப்பாக பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் வரும்பொழுது பூர்வ புண்ணியத்தின் பலனாக கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும்.
ஐந்தினில் குருதான் வந்தால்
அனைதிலும் வெற்றிகிட்டும்!
பைதனில் பணமும் சேரும்!
பாராளும் யோகம் வாய்க்கும்!
வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும் உண்மை!
செய்தொழில் வளர்ச்சியாகும்!
செல்வாக்கும் அதிகரிக்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 5-ல் குரு சஞ்சரிப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடிவரும்.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் 1, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குரு பார்வை பதியும் அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய பாதை புலப்படும். அன்பு நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். சகோதரர்களுக்குள் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பதால் குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்துகொண்டு ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கப் போகின்றது.
11-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வெளிநாட்டிலுள்ள பிரபலமான நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். இளைய சகோதரத்தின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில் அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என்ற சிந்தனை உருவாகும். மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
உங்கள் ராசிநாதன் குரு அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க மாற்றினத்தவர்கள் உதவுவர். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்யாண காரியங்களை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உள்நாட்டில் மட்டுமின்றி ெவளிநாட்டிலிருந்தும் அழைப்புகள் வரலாம்.
பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு நன்றாக இருக்கும். சுக்ரன் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பாடுபட்டதற்கேற்ற பலன் மட்டுமல்லாமல் உதிரி வருமானங்களும் உண்டு. வியாபாரம் வெற்றிநடை போடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தலைமைக்குத் தகுதியானவர்கள் என்று பொறுப்புகள் தேடி வரலாம். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உத்தியோகத்தில் மீண்டும் சேர வாய்ப்பு வரும். கவுரவம், அந்தஸ்து உயரும்.
கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி உண்டு. பயணங்கள் பலன் தரும். வழக்குகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் நெருக்கமாவர். விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு. நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் முக்கிய விஷயங்களை சிந்தித்து முடிவெடுக்க உகந்த நேரமிது. என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் பலமடங்கு உயரும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவர். ஈடுபடும் தொழில்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
ராகு- கேது பெயர்ச்சி!
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றார்கள். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். சேமிப்புக் கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு யோகம் சகப் பணியாளர்களுக்கு போய்ச் சேரும். இப்போது குருவுடன் இணைந்த ராகு விலகி விட்டதால் குருவிற்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும்,4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் வக்ரம் பெறும்பொழுது ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்தியச் செலவு மிகுதியாகும். யாருக்கேனும் பணப்பொறுப்புசொல்வதென்றால் யோசித்துச் சொல்லுங்கள். உத்தியோகத்தில் கூட உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாரிடமும் கொடுக்கக்கூடாது. பொருளாதார நிலை சரிவு நிலைக்கு வந்து பிறகு சகஜ நிலைக்கு மாறும். தொழில், உத்தியோகம் பற்றிய தகவல்களையோ, உங்கள் முன்னேற்றம் பற்றியோ யாரிடமும் விமர்சித்துப் பேச வேண்டாம்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
தனுசு ராசியில் பிறந்த பெண்ளுக்குத் தடைகள் அனைத்தும் விலகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் திருப்தியாக நடைபெறும். மூதாதையர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். இல்லத்துப் பூஜையறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்து பூஜையறையில் குரு பகவான் படம் வைத்து முல்லைபூ மாலை சூட்டி குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் தேய்பிறை அஷ்டமி திதியில் வைரவை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும்.