ஜாதகத்தில் குளிகன் எங்கே இருந்தால் என்ன பலன்..?

ஆயுளை நிர்ணயிக்கும் கோளான சனியின் மகன் என்பதால் குளிகனும் ஆயுள் பாவத்தைப் பற்றி அறிய உதவும்.

Update: 2024-10-09 06:53 GMT

பொதுவாக எல்லோருக்கும் நவ கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி, சுக்கிரன், ராகு, கேது வைத்து மட்டும்தான் பலன் கூறுவதை பார்த்திருக்கின்றோம். கம்ப்யூட்டர் ஜாதகம் போடும் போது குளிகன் என்ற மாந்தியை பார்த்திருக்கின்றோம். ஆனால், அதனைப் பற்றி பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை (ஜோதிடம் தெரிந்தவர்களைத் தவிர).

கேரளாவில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதன் அடிப்படையில் ஜாதகப் பலன் பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெரும்பாலானோர், இந்த மாந்தி அல்லது குளிகனின் பலன் மட்டுமல்லாமல், அதனைப் பற்றி சிந்திப்பதும் கிடையாது.

மாந்தி அல்லது குளிகன் என்பவர் சனி கிரகத்துடன் தொடர்புடையவர். சனீஸ்வர பகவானின் மகன் என ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

மாந்திக்கு பார்வைகள் உண்டா?

குரு, செவ்வாய், மற்றும் சனியின் சிறப்பு பார்வைகள் போலவே மாந்திக்கும் உண்டா என்றால் உண்டு என்றே கூறமுடியும். மாந்தி தன் இடத்திலிருந்து 2, 12 ஸ்தானங்களையும், மற்றும் தன் இடத்திலிருந்து 7, 9 ஸ்தானங்களையும் பார்வை செய்வார்.

இவரது காரகத்துவம் என்று பார்க்கும் போது இவர் ஆயுளை நிர்ணயிக்கும் கோளான சனியின் மகன் என்பதால் இவரும் ஆயுள் பாவத்தைப் பற்றி அறிய உதவும். இந்த மாந்திக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது கேரளாவில் இந்த மாந்தியை வைத்துத்தான் கேரள ஜோதிடர்கள் ஆயுளை நிர்ணயம் செய்கிறார்கள்.

மாந்தி எங்கே இருந்தால் என்ன பலன்?

இந்த மாந்தி எங்கெங்கெல்லாம் இருந்தால் ஜாதகருக்கு என்ன பலன் நடக்கும் என்பதை பொது பலனாக ஜோதிட சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதை நாம் இங்கே காணலாம்.

* முதல் பாவத்தில் மாந்தி இருந்தால் மிகவும் மந்தமாகவும், பயந்த சுபாவமாகவும், எண்ணங்களில் சலனமாகவும் இருப்பர்.

* இரண்டாம் பாவத்தில் மாந்தி இருந்தால் அதிகம் செலவு செய்பவராகவும், மற்றவர்களின் மனதை புண்படும்படி பேசுபவராகவும், வீண் வம்பினை விலைக்கு வாங்குபவராகவும் இருப்பர்.

* மூன்றாம் பாவத்தில் மாந்தி இருந்தால் காது சம்பந்தப்பட்ட நோய் வரக் கூடும். கைகளில் அடிபட வாய்ப்புள்ளது அல்லது வெட்டுக்காயம் ஏற்படும் மற்றும் தைரியமாக முடிவெடுப்பவர்.

*நான்காம் பாவத்தில் மாந்தி இருந்தால் சொந்த உறவில் நாட்டம் இல்லாதவர் அந்நியர்களுடன் அதிகம் பழகுபவர், தாய் சொல்லிற்கு அடிபணியாதவன் மற்றும் மார்புப் பகுதியில் நோய்வர வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

* ஐந்தாம் பாவத்தில் மாந்தி இருந்தால் அற்ப புத்திரன் உள்ளவன், ஞாபக சக்தி குறைவானவன் மற்றும் பெரியவர்களை அவமதிப்பவன்.

* ஆறாம் பாவத்தில் மாந்தி இருந்தால் இவர்கள் தங்கள் எதிர்பாலினரை எளிதில் வசியம் செய்யும் அளவிற்கு உடல்வாகு அமையப்பெற்றவர் மற்றும் எதிரிகளே அஞ்சும் அளவிற்கு வெற்றி காண்பவன்.

* ஏழாம் பாவத்தில் மாந்தி இருந்தால் தன் துணையாருடன் கருத்து மோதல்கள் அடிக்கடி ஏற்படும். விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினை இல்லை.

* எட்டாம் பாவத்தில் மாந்தி இருந்தால் ஆயுள் பாவத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி நோய் வரக்கூடும். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

* ஒன்பதாம் பாவத்தில் மாந்தி இருந்தால் சேர்த்து வைத்திருந்த பூர்வீக சொத்தினை அழிப்பவன், தந்தையை மதிக்காதவன், தன் இஷ்டப்படி நடப்பவன்.

* பத்தாம் பாவத்தில் மாந்தி இருந்தால் அவ்வப்போது பயணம் மேற்கொள்பவன். பயணத்தை விரும்புபவன், கடவுள் நம்பிக்கை குறைந்தவன்.

* பதினொன்றாம் பாவத்தில் மாந்தி இருந்தால் அதிக நண்பர்களைப் பெற்றவன், தர்ம காரியங்களில் விருப்பம் உள்ளவன், புகழுடையவன்.

* பன்னிரெண்டாம் பாவத்தில் மாந்தி இருந்தால் நீண்ட தூர பயணம் மேற்கொள்பவன், பற்றில்லாதவன் மொத்தத்தில் சந்நியாசியாக வாழ்பவன்.

மேலே குறிப்பிட்ட பலன்கள் யாவும் பொதுவானவையே. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் மற்ற மற்ற கிரகங்களின் அமைப்பைக் கொண்டு பலன்கள் மாறுபடும்.

கட்டுரையாளர்: திருமதி ந.ஞானரதம்,

செல்:  9381090389

Tags:    

மேலும் செய்திகள்