மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update: 2022-09-17 21:15 GMT

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை

உணர்வுகளை மதிக்கும் உன்னதமான குணம்பெற்ற மீன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். வக்ரச் சனியின் பார்வையும், உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தடை, தாமதம் அதிகரிக்கும்.

கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமானவர் சுக்ரன். எனவே எதிர்பாராத சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

கன்னி - புதன் சஞ்சாரம்

புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவதால், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மாறும்.

மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இடம், பூமி விற்பனையால் சில பிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறப்புகளைச் சார்ந்து இருப்பவர்கள் அவர்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் முடிந்துபோன பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம்.

சனி வக்ர நிவர்த்தி

புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பலம் பெறுகிறார். எனவே லாபம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் பலமடங்கு உயரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், இங்கிருப்பவர்கள் வெளிநாடு செல்ல முடியாமலும் பிரச்சினைகள் உருவாகும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீண்ட நாளாக இருந்த உடல்நலப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அதிக வேலைப்பளு உண்டு.

இம்மாதம் தட்சிணாமூர்த்தி வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதனான குருவும், லாப ஸ்தானத்தில் உள்ள சனியும் வக்ரம் பெற்றுள்ளனர். எனவே எதையும் யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். பணநெருக்கடி அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். என்றாலும் அதற்கேற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்