புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் மீன ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், உற்சாகக் குறைவும் உருவாகும். தடைகளும், தாமதங்களும் புதிய முயற்சிகளில் குறுக்கீடுகளும் வரலாம். லாபாதிபதி சனியும் வக்ரம் பெற்றிருப்பதால், பொருளாதாரத்தில் பற்றாக்குறை அகலும். எதையும் யோசித்து செய்வதன் மூலமே எண்ணங்கள் நிறைவேறும்.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெற்றாலும், உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். கல்யாணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு திருப்தி தரும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் விற்பனையாகி அதிக லாபத்தை தந்து மகிழ்ச்சியைப் பெருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை மட்டுமல்ல, உடன்பிறப்புகளாலும் சில உபத்திரவங்கள் வரலாம். சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். 'பெற்றோர் மற்ற சகோதரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தங்களுக்கு கிடைக்கவில்லையே' என்று ஆதங்கப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் உண்டு.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனஸ் தாபங்கள் நீங்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் உண்டு. மாணவ - மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது. பெண்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருந்தாலும், தேவைக்கேற்ற பணம் வந்து சேரும். சுபச்செய்தி உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 20, 21, 22, 26, 27, அக்டோபர்: 1, 2, 6, 7, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.