ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை
வாய்ப்பைத் தேடிச் சென்றால்தான் வெற்றிகாண இயலும் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
சிம்ம - புதன் சஞ்சாரம்
ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு வேலை கைகூடலாம்.
கடக - சுக்ரன் சஞ்சாரம்
ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். தொழிலை விரிவு செய்யமுயற்சிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பப் பிரச்சினை குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
குருவின் வக்ர இயக்கம்
ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாகும். அந்த குரு, வக்ரமாக இருக்கையில் உடன்பிறப்புகளுடன் மோதல் உருவாகலாம். வழக்குகள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். தொழிலை மாற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குரு பகவான் 6-க்கு அதிபதியாகவும் விளங்குவதால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். பிற நிறுவனங்களில் இருந்து அதிக ஊதியத்துடன் அழைப்பு வரலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அதை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிரிகள் பலம் குறையும். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு செவ்வாய் வருவதால், ஆரோக்கியத்தில் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. இடமாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வந்து சேரும். 'யாரையும் எளிதில் நம்ப முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் உமாமகேஸ்வரரை வழிபடுவதன் மூலம் உயர்வு காணலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 8, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அா்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் சுபகாரியங்கள் முடிவாகும். உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். அலுவலகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். சனி ஆதிக்கம் இருப்பதால் அனுமனை வழிபடுங்கள்.