பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை
எதிலும் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். எனவே இதுவரை இருந்த தடைகள் அகலும். தேவையற்ற பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க வழிசெய்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், அர்த்தாஷ்டமச் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்பதால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நிலைப்படுத்திக் கொள்வது நல்லது. எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்வதன் மூலமே, நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆகாரக் கட்டுப்பாடு களாலும், அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளலாம்.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வருகின்றார். அங்கிருந்தபடி விரயாதிபதியான புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். பரம்பரைச் சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். புதிய நட்பால் பொருள் இழப்பு ஏற்படும் என்பதால், பழகுபவர்கள் சொல்லும் முடிவை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் கிடைக்காது. அருகில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், 8-ல் சஞ்சரிக்கும் பொழுது இடையூறுகள் அகலும். 'எப்படி முடியுமோ' என்று நினைத்த காரியம் எளிதில் முடியும். சவாலான வேலைகளைக் கூட, சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி சிறுசிறு தொல்லைகள் வரலாம். ஜீரணத் தொல்லை ஏற்படாமல் சீராக உடலை வைத்துக்கொள்ளுங்கள். இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை இனிமையாகவே அமையும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்து லாபத்தை பெருக்கிக்கொள்ள எடுத்த முயற்சி கைகூடும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டி, பந்தயங்களில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு உறவினர்களின் உதவி கிடைத்து, உள்ளம் மகிழும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் புதிய பாதை அமையும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 17, 18, 29, 30, ஏப்ரல்: 3, 4, 8, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.