கடகம் - பிலவ ஆண்டு பலன்

Update: 2022-05-23 15:53 GMT

14.4.2022 முதல் 13.4.2023 வரை

(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய) பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்

ஏழில் சனி; எதிலும் கவனம் தேவை

கடக ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டு சப்தம ஸ்தானத்தில் சனியும், சுக ஸ்தானத்தில் கேதுவும் வீற்றிருக்கும் அமைப்பில் தொடங்குவதால் நிதானத்தோடு செயல்பட வேண்டிய ஆண்டாகவே அமைகிறது. தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். ஆண்டு தொடங்கும் பொழுதே குருப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியைப் பார்ப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், செவ்வாயைப் பார்க்கிறார். எனவே 'சந்திர மங்கள யோகம்' ஏற்படுகிறது. மேலும் செவ்வாயோடு சுக்ரன் இணைந்திருப்பதால், 'சுக்ர மங்கள யோக'மும் செயல்படுகிறது. சூரியன் புதனோடு இணைந்திருப்பதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. இத்தனை யோகங்களுக்கு மத்தியில் குரு பார்வை உங்கள் ராசியில் பதியும் விதத்தில் இந்த ஆண்டின் தொடக்கம் அமைந்திருக்கிறது. ஆனால் கண்டகச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடக்கிறது? எனவே திட்டமிட்ட காரியங்கள் உடனடியாக நடைபெறாவிட்டாலும், கொஞ்சம் தாமதித்தாவது நடந்தேறிவிடும்.

சுக ஸ்தானத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் இருக்கிறார்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அடிக்கடி ஆரோக்கியத் தொல்லை ஏற்படும்.அசதியின் காரணமாக மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது அவசியம். தாயின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவுகளால் விரயங்கள் உண்டு. பிரச்சினைக்குரிய வீட்டை கொடுத்து விட்டு, இடமோ, வேறு வீடோ வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். ராகு - கேதுக்களுக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று, யோகபலம் பெற்ற நாளில் வழிபாடுகளை செய்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சப்தம ஸ்தானத்தில் சனி இருப்பது அவ்வளவு நல்லதல்ல. கண்டகச் சனி என்பதால், வேலைப்பளு கூடும். ஆனால் அதற்கேற்ற வருவாய் இருக்காது. திடீரென இடமாற்றம், வீடு மாற்றம் வரலாம். மருத்துவச் செலவுகள், மனக்கலக்கத்தைத் தரும். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. குடும்பப் பிரச்சினை கூடும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய், அது உபத்திரவமாக முடியலாம். இடம், பூமி விற்பனை செய்ததில், சில பிரச்சினைகள் தலைதூக்கலாம். எதைச் செய்தாலும் யோசித்துச் செய்யுங்கள்.

9-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான், 9-ம் இடத்திலேயே இருப்பது யோகம்தான். குரு வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 'தர்ம ஸ்தானம்', 'பாக்ய ஸ்தானம்' என்று சொல்லப்படும் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், முன்னோர் செய்த தர்மத்தைத், தொடர்ந்து செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். சுபச்செலவுகளை மேற்கொள்வீர்கள்.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. இதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீராகும். உள்ளத்தில் தோன்றிய கவலை மறைந்து, உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிறரைச் சார்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு தனித்து இயங்குவீர்கள். தொழில் முன்னேற்றமும், தனவரவும் திருப்தி தரும். நேர்மறைச் சொற்களைப் பேசுவதன் மூலம் நினைத்த காரியங்கள் உடனடியாக முடிவதை அனுபவத்தில் உணரலாம். குடும்ப முன்னேற்றம் சிறப்பாக அமையும். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கல்யாணம், காதுகுத்து, கடை திறப்பு விழா, புதுமனை புகுவிழா போன்றவை உருவாகும் நேரம் இது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். சனியின் வக்ர காலத்தில் நற்பலன்கள் நடக்கும் என்றாலும், சப்தமாதிபதியாக சனி இருப்பதால் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவு முறியலாம். தொழில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி செல்கிறார். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டத்துச் சனியின் ஆதிக்கம் வருகிறது. அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது உழைப்பு அதிகரிக்கும். ஆனால் ஊதியம் குறைவாகவே இருக்கும். இழப்பு ஏற்படாமல் இருக்க எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டில் விரயங்கள் அதிகரிக்கும் என்பதால் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளோடும் பிரச்சினைகள் வராமல் இருக்க அனுசரணை அவசியம். தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் வாழ்க்கையில் அமைதி நிலவும். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் நடைபெறும். குடும்பத் தகவல்களை மூன்றாம் நபரிடம் சொல்லி விமர்சிக்க வேண்டாம். பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய உத்தியோக உயர்வில் தாமதம் ஏற்படும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார்.எனவே மன அமைதி குறையும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் ஏற்படும். பாகப்பிரிவினையில் கேட்ட பங்கு கிடைக்காமல் போகலாம். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. எதைச் செய்தாலும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

மேலும் செய்திகள்

No data