கடகம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு

Update:2023-04-14 00:15 IST

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(புனர்பூசம், 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள் : ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

கூடுதல் கவனம் தேவை!

விடாமுயற்சியால் வெற்றியை வரவழைத்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

தேசப்பற்றும், செயலில் சுறுசுறுப்பும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த சோபகிருது ஆண்டின் தொடக்கம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தோடு தொடங்குகின்றது. 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி' என்பது பழமொழி. ஆனால் உங்களை பொறுத்தவரை அஷ்டமாதிபதியாகச் சனி விளங்குவதால், தன் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். வந்த துயரம் வாயிலோடு நின்றுவிட வேண்டுமானால் காக வாகனத்தானைக் கைகூப்பித் தொழ வேண்டியது அவசியமாகும்.

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். சனி பகவான் அஷ்டமத்தில் சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கின்றார். இடையில் கும்பத்தில் வக்ரம் பெறுவதோடு 24.8.2023-ல் மீண்டும் மகரத்திற்கு வந்து கண்டகச் சனியாகப் பலம் பெறுகின்றார். அஷ்டமத்துச் சனி நடைபெற்றாலும், கண்டகச் சனி நடைபெற்றாலும் மிகுந்த கவனத்தோடு தான் செயல்பட வேண்டும். பிறருக்கு நன்மை செய்தால் கூட அது தீமையாகத்தான் தெரியும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். அமைதி கிடைக்க வேண்டுமானால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் செவ்வாயின் பார்வை இந்த ஆண்டு மூன்று முறை சனியைப் பார்க்கும் விதத்தில் வருகின்றது. அந்தந்த காலங்களில் எல்லாம் அவசரப்பட்டு வாக்கு கொடுப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். அதிகார வர்க்கத்தினரின் பகையை வளர்த்துக்கொள்ள நேரிடும். ஆரோக்கியமும் அடிக்கடி தொல்லை கொடுக்கும். ெவளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத சூழ்நிலை அல்லது அங்கேயே வேலை கிடைக்காத நிலை ஏற்படலாம். 22.4.2023-ல் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகின்றார். இது தொழில் மாற்றம் தரும் இடம் என்பதால் மாற்றங்கள் வரலாம்.

8.10.2023-ல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் கேதுவும், 9-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இந்த அரவு கிரகங்களின் மாற்றம் உங்களுக்கு நன்மையை வழங்கும். என்றாலும், பெயர்ச்சியாகும் சமயத்தில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தோ்ந்தெடுத்து சர்ப்ப சாந்தி செய்துகொள்வது நல்லது. ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக சகோதர உறவில் விரிசல்கள் ஏற்படும். இக்காலத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருந்தால் கவலை இல்லை. அல்லாதவர்கள் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. ஆலய வழிபாடும் நன்மை தரும்.

குருப்பெயர்ச்சி!

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. அவரது பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிந்து புனிதப்படுகின்றது. பொதுவாக 10-ல் சஞ்சரிக்கும் குருவால் பதவி மாற்றம், இடமாற்றம் உருவாகும். அதுமட்டுமல்ல உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே' என்று புதிய வேலைக்கு முயற்சி செய்வர். இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

குருவின் பார்வை பலத்தால் தாயின் உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாகப் பேசிப் பேசி விட்டுப்போன இடத்தை வாங்கி வீடு கட்ட நினைப்பீர்கள். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். புதிதாக வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற கனவை நனவாக்கக் கூடிய நேரமிது.

உத்தியோகத்தில் 'எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்கள் மற்ற நிறுவனங்களில் சேர எடுத்த முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. வழக்குகள் சாதகமாக முடியும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

கும்பச் சனி!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி பகவான் வீற்றிருக்கின்றார். அவருக்கு கும்ப ராசி சொந்த வீடு என்பதால் கூடுதல் பலத்துடன் சஞ்சரிக்கின்றார். எனவே விரயத்திற்கு மேல் விரயங்கள் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் தவிர்க்க முடியாததாக அமையும். வீண்பழிகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தடை ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறு கிறார். 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் பெறுகிறார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையும். கண்டகச்சனியும், அஷ்டமத்துச் சனியும் வக்ரம் பெறும்பொழுது நன்மைகளே நடைபெறும். இதுவரை முயற்சித்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். புதியவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் ஊதிய உயர்வின் காரணமாக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலும் பணிபுரியும் சூழ்நிலை உருவாகலாம்.

ராகு-கேது பெயர்ச்சி!

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார். 9-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப் போவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். ெவளிநாட்டிலிருந்து பணிபுரிய அழைப்புகள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.

சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அடிக்கடி குறைபாடுகள் வந்து சேரும். தொழிலில் புதியவர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கலாம். பழைய வழக்குகள் முடிவடைந்த நேரத்தில் புதிய வழக்குகள் தோன்றலாம். வெற்றியைப் போராடிப் பெற வேண்டிய நேரமிது.

வளர்ச்சி தரும் வழிபாடு!

புத்தாண்டில் இன்பங்கள் இல்லம் தேடி வர சண்முக கவசம் பாடி சண்முக நாதப் பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டு வருவது நல்லது. யோக பலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் உரிய பலன்கள் இல்லம் தேடி வரும்.

பெண்களுக்கான பலன்கள்!

இந்தப் புத்தாண்டில் ஆரோக்கியக் குறைபாடுகள் அதிகரிக்கும். செலவுகள் கூடும். குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. மனஅழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட நிதானமும், அமைதியும் தேவை. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு அடிக்கடி விடுமுறை எடுத்ததின் விளைவாக பிரச்சினைகள் ஏற்படலாம். பொருளாதார நிலை திருப்தியாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தி தரும்.

குரு-சனியின் வக்ரம்!

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். நோய் நொடிகள் அகலும். பகைவர்கள் மனம் மாறிப் பாசம் காட்டுவர். அதே நேரம் 9-க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் தந்தை வழி ஆதரவு திருப்தி தரும். முன்னோர்கள் கட்டி வைத்த சிதிலமடைந்த ஆலயங்களை மீண்டும் புதுப்பிப்பீர்கள்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகின்றார். பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்தில் வக்ரம் பெறுகின்றார். 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ரம் பெறுவதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளை மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். அதே நேரம் அஷ்டமாதிபதியாகவும் சனி விளங்குவதால் திருமண முயற்சி கைகூடுவது போல் இருந்து கைநழுவிச் செல்லலாம். தொழில் வெற்றிகரமாக நடந்தாலும் லாபம் கைக்கு வருவது அரிது. உத்தியோகத்தில் மனசாட்சிக்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்ய வேண்டாம்.

மேலும் செய்திகள்

No data