எப்படி இருக்கிறது உதயநிதி பிரசாரக் களம்? மீண்டும் ஒற்றை செங்கல்லால் ஓங்கி அடிப்பாரா?

பிரசாரத்தின்போது கேள்வி கேட்கும் மக்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் பக்குவம் வெளிப்படும்.;

Update: 2024-04-16 07:07 GMT

கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஹாட் டாபிக்காக இருந்தது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய செங்கல் பிரசாரம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக சொல்லி அடிக்கல் நாட்டிய பாஜக அரசு, பல ஆண்டுகளாகியும் அதற்குமேல் அங்கே ஒன்றுமே செய்யவில்லை. அடிக்கல் நாட்டுவதற்காக செங்கல் வைத்தது தவிர வேறு ஏதும் நடக்கவில்லை. தமிழ்நாட்டை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அந்தப் பிரசாரம் உரத்துப் பேசியது. எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்த்தது.

அந்தப் பரப்புரை இரண்டு விஷயங்களை செய்தது. பாரம்பரியமான மேடைப்பேச்சு மொழிக்கான காலம் முடிந்துவிட்டது; இயல்பான பேச்சுமொழிப் பரப்புரைகள் மக்களை எளிதாக கவர்கின்றன, கவனிக்கவைக்கின்றன என்பதை காட்டியது. இன்னொன்று, எதிரணி செய்த தவறை பளிச்சென்று காட்டும் வகையில் ஒரு படத்தையோ, பொருளையோ காட்டிப் பேசுவது, நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு கூடுதல் கவனத்தைக் கொண்டுவரும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

ராமர் கோயில் செங்கல் யாத்திரைகள் மூலம், தங்கள் அரசியல் கோட்டையை கட்டிக்கொண்டவர்கள் பாஜகவினர். அந்தக் கோட்டையில் இருந்து ஒரே ஒரு செங்கல்லை உருவி எடுத்து, ஒரு தேர்தலில் அவர்களை நிர்மூலம் ஆக்கிக்காட்டினார் உதயநிதி.

இப்போது மீண்டும் அதே செங்கல்லோடு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் களத்துக்கு வந்திருக்கிறார். பயன்படுத்திய ஆயுதத்தையே மீண்டும் பயன்படுத்துவதால் அது எடுபடுமா என்று கேள்வி வரும்.

ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். எந்தப் பிரச்சனைக்காக அவர் செங்கல்லை எடுத்தாரோ அந்தப் பிரச்சனை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதாக கூறி அடிக்கல் நாட்டிவிட்டு, அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாக ஒரு தேர்தல் பரப்புரையில் கடும் விமர்சனத்துக்கு ஆளான பிறகும், தோல்விக்கு அது ஒரு காரணமாக மாறிய பிறகும்கூட, மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அந்த ஒற்றை செங்கல் பிரசாரம் நடந்து 3 ஆண்டுகள் ஆன பிறகும், 'ஆமாம் அப்படித்தான்' என்ற அலட்சியத் தொனியோடு எய்ம்ஸ் திட்டத்தை பாஜக அரசு அப்படியே கிடப்பில் வைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, மீண்டும் செங்கல்லை கையில் எடுத்திருப்பதை சலிப்பூட்டும் போராட்ட முறை என்று குற்றம்சாட்ட முடியாது.

பிரச்சனை தீரும் வரை போராடித்தானே ஆகவேண்டும். அலட்சியம் நீடிக்கும் வரை அதை சுட்டிக்காட்டுவதும் தொடரத்தானே வேண்டும். இப்போது பிரச்சனை அதுவல்ல. உதயநிதி முன்னெடுத்திருக்கிற செங்கல் பிரசாரத்தின் இரண்டாவது வெர்ஷன் எந்த அளவுக்கு திமுக கூட்டணிக்கு இந்த முறை ஆதரவை அள்ளித் தருகிறது என்பதுதான் கேள்வி.

அதைப் பார்ப்பதற்கு முன்பாக இன்னொரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இந்த முறை உதயநிதி முன்னெடுத்திருப்பது வெறும் செங்கல் பிரசாரம் அல்ல.

அவரது பிரசாரம் கடந்த முறையைக் காட்டிலும் மேலும் கூர்மையாகி இருக்கிறது. மக்களிடம் கேள்வி கேட்டு தனது பிரசாரத்தை ஓர் உரையாடலாக அவர் கட்டமைக்கிறார். இதனால், தனது பார்வையாளர்கள் அனைவரையும் தனது உரைக்குள் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அவர் பேச்சை ஏற்றுக்கொள்ள வைக்கும் மென்மையான ஆற்றல், மக்களுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஆற்றல் அவரது பரப்புரைகளுக்கு வந்துள்ளது.

பிரசாரத்துக்குச் செல்லும் தலைவர்களிடம் எதிர்மறை கேள்விகளைக் கேட்டு அவர்களை திக்குமுக்காடச் செய்கிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் எதார்த்தமாக கேள்வி கேட்கும் பொதுமக்களாக இருக்கலாம். அல்லது எதிரணியால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் பக்குவம் வெளிப்படும்.

ஊர் பேர் தெரியாத இரண்டு பாஜக காரர்களிடம் ஜி.எஸ்.டி. பற்றி கேட்ட ஒரு பெண்ணை, அடிக்கச் சென்றார்கள் அந்த பாஜகவினர். ஆனால், பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் எதிர்க்கேள்வி கேட்கிறவர்களிடம் பொறுமையாக உரையாடுகிறார் உதயநிதி.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத சிலரின் ஏமாற்றக் குரல்கள் அவரை எதிர்கொள்ளவே செய்கிறது. அடுத்தடுத்த கூட்டத்திலும் அந்தக் கேள்வியை திறந்த மனதோடு வரவேற்கிறார் உதயநிதி.

குறைபாடுகளை ஒப்புக்கொண்டு சரி செய்வதாக வாக்குறுதி தருகிறார். இதை அவர் அவமானம் என்று எடுத்துக்கொண்டு கோபப்படவில்லை. பிரச்சனை என்று நினைத்து தப்பி ஓட நினைக்கவில்லை. உரையாட நினைக்கிறார்.

இந்த அணுகுமுறை அவரது ஆளுமையை நோக்கி மக்களுக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அவர் பேசுகிற விஷயங்களின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.

நீட் விலக்கு பற்றி உதயநிதி கூட்டம் ஒன்றில் கேள்வி கேட்டப் பெண்ணிடம் அதற்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம், உழைத்திருக்கிறோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், நீட் விலக்கு பெறுவதில் வெற்றி பெறலாம் என்று பொறுமையாக விளக்கியிருக்கிறார் உதயநிதி.

அவரது பொறுமையான பதிலால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இதுவரை நடந்திருக்கிற வேலைகளை பற்றியும், இந்தப் பிரச்சனை எவ்வளவு சிக்கலானது என்பதையும் புரிந்துகொண்ட அந்த இளம் பெண் தானே ஒரு வீடியோ பேசிப் பதிவேற்றியிருக்கிறார். பிரச்சனையைப் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், இந்தியா கூட்டணியின் ஆதரவாளராகவும், உதயநிதியின் ஆளுமையைப் போற்றுகிறவராகவும் அவர் மாறியிருக்கிறார். இப்படி இதயங்களை வென்றெடுப்பதுதானே பரப்புரை? அதுதானே அரசியல்? அதுதானே தலைமைப் பண்பு?

அப்படி என்றால், இந்தப் பிரசாரப் பயணத்தில் மேலும் பக்குவப்பட்ட பரப்புரையாளராக, அரசியல் தலைவராக மிளிர்கிறார் உதயநிதி. இந்தியா கூட்டணிக்கும், திமுக-வுக்கும் ஆதரவைப் பெருக்கியிருக்கிறார். தனது ஆளுமையையும் மிளிர வைக்கிறார்.

அதிமுக-வில் எடப்பாடி மட்டுமே பேசிவருகிறார். பாஜகவில் மோடி போன்ற வடநாட்டு முகங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அண்ணாமலை மட்டுமே பிரசார முகமாகத் தெரிகிறார். அது தவிர, தானே ஒரு வேட்பாளராக இருக்கும் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பயணம் செய்யவில்லை.

மூன்று அணிகளிலும் இன்று தமிழ்நாடு முழுவதும் வேன் பரப்புரை மேற்கொண்டிருக்கிற ஒரே அரசியல் தலைவராக உதயநிதியே திகழ்கிறார்.

அதைப் போலவே, திமுகவில் மட்டுமே பிரசாரத்தை முன்னின்று நடத்தும் கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக, தெளிவான இரண்டாம் கட்டத் தலைவர்கள் பரப்புரையில், தேர்தல் பணியில் தெரிகிறார்கள். அவர்களுக்கு நடுவே தமிழ்நாடு முழுவதையும் வேன் பிரசாரம் மூலம் சுற்றிவரும் உதயநிதி நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்