இவர்கள் சிகரம் தொட்ட தாய்மார்கள்!
உலகிலேயே சிறந்த தானங்கள் என்றால் ரத்ததானமும், தாய்ப்பால் தானமும்தான். இந்த இரு தானங்களையும் உயிர்தானங்கள் என்றே சொல்லலாம்.;
உலகிலேயே சிறந்த தானங்கள் என்றால் ரத்ததானமும், தாய்ப்பால் தானமும்தான். இந்த இரு தானங்களையும் உயிர்தானங்கள் என்றே சொல்லலாம். அதிலும் தேவாமிர்தத்துக்கு இணையான, தான் பெற்ற குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை மற்ற குழந்தைகளுக்கும் தானமாக கொடுக்கும் அந்த தானத்துக்கு ஈடு இணையே இல்லை.
இந்த மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உலகம் முழுவதிலும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு பிறந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உன்னத அமுதமாகும். தாய் தன் குழந்தைக்கு பாலை மட்டும் ஊட்டுவதில்லை, தன் அன்பையும் சேர்த்து ஊட்டுகிறாள். குழந்தைகள் தாய்ப்பாலை குடித்தால் பலவித நோய்களில் இருந்து தங்களை வளரும் வரை பாதுகாத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. தாய்ப்பாலில் நிறைய நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதால் எந்தவித நோயோ, நோய்த்தொற்றோ ஏற்படாமல் பாதுகாக்கிறது. குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் இருப்பதால் இது ஒரு தன்னிகரற்ற உணவும் கூட.
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை மட்டுமல்லாமல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது, அதன் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது. பல குழந்தைகளுக்கு இந்த அரும்பெறும் வாய்ப்பு கிடைப்பதில்லை. சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை. சில குழந்தைகளின் தாய் இறந்துவிடும் சூழ்நிலை இருக்கிறது. மேலும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் தாயிடம் இருந்து கிடைப்பதில்லை.
இதுபோல பல காரணங்களால் தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்கும் பாக்கியம் இல்லாத பச்சிளங்குழந்தைகளுக்கு உதவ தாய்ப்பால் வங்கி திட்டம் தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டு, இப்போது அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்பட பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன. பல தியாக மனப்பான்மை கொண்ட, மனிதநேயத்தின் உச்ச உணர்வு கொண்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக மீதி பாலை இந்த தாய்ப்பால் வங்கிகளில் தானம் செய்கிறார்கள்.
தாய்ப்பால் தானத்தை ஒரு தாயால் மட்டுமே செய்ய முடியும். தானம் கொடுத்தவுடன் மீண்டும் சுரந்துவிடும் என்பதால், இதனால் தாய்க்கு எந்த குறையும் இல்லை. தான் பெற்ற குழந்தை போல தாய்பால் கிடைக்காத மற்ற குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என்ற உயரிய குணம் கொண்ட பெண்கள் இந்தவகையில் தாய்ப்பால் தானம் செய்கிறார்கள். சமீபத்தில் கோயம்புத்தூர் ''தினத்தந்தி'' பதிப்பில் 'சிகரம் தொட்ட மனிதர்கள்' என்ற தலைப்பில் 100 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்த கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா, கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்த சரவணம்பட்டியில் வாழ்ந்துவரும் காவியா ஆகியோரை பாராட்டும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இவ்வாறு யாரோ பெற்ற குழந்தைகளுக்காக தன்னிடம் சுரக்கும் தாய்ப்பாலை தானமாக கொடுக்கும் பெண்கள் சிகரம் தொட்ட தாய்மார்கள்தான். பெண்களுக்கு மட்டுமே இயற்கை அருட்கொடையாக கொடுக்கும் தாய்ப்பாலை, அந்த நல்வாய்ப்பு கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு கொடுக்க வாய்ப்புள்ளவர்கள் தானம் தர முன்வரவேண்டும் என்பதே அந்த அபலை குழந்தைகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தானத்தை செய்ய முன்வரும் பெண்களை ஈடு இணையற்ற அன்னையர் என்றே அழைக்கலாம்.