இரட்டை ரெயில் பாதை வந்துவிட்டது; கூடுதல் ரெயில்கள் விடலாமே!

‘ரெயில் பயணத்திற்கு காத்திருப்போர் இல்லாத நிலையை 5 ஆண்டுக்குள் உருவாக்குவோம்’ என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.;

Update:2024-05-22 14:10 IST

சென்னை,

மக்கள் வாழ்வில் பயணம் என்பது ஒரு அத்தியாவசிய நிகழ்வாகிவிட்டது. பயணத்திற்கு எல்லோருமே முதல் தேர்வாக ரெயிலையே விரும்புகிறார்கள். கழிப்பறை வசதி, படுக்கை வசதி, பொருட்கள் வைக்கும் வசதியுடன் பாதுகாப்பான பயணமும் கிடைப்பதே இதற்கு காரணம். 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதியிருப்பதால் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஒரு நாளைக்கு முன்பு தட்கல் டிக்கெட் எடுக்கலாம் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. ஆனால், ஒவ்வொரு ரெயிலிலும் ஒரு குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், எல்லோராலும் பயணம் செய்ய முடிவதில்லை. ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பயணநாள் நெருங்கும் வரை காத்திருந்து.. காத்திருந்து.. ரெயில் புறப்படுவதற்கு கடைசி 2 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட் கிடைக்காமல் போன அனுபவம் பலருக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு, பயணத்திட்டத்தை வேறுவிதமாக வகுக்கும்போது அதற்கு கூடுதல்செலவு ஏற்படுகிறது. நாளுக்குநாள் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு ரெயில்களின் எண்ணிக்கை உயரவே இல்லை. காரணம், கூடுதல் ரெயில்கள் இயக்கும் அளவுக்கு நேர இடைவெளி கிடைப்பதில்லை என்று ரெயில்வே நிர்வாகம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் 4,028 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதையான தண்டவாளங்கள் இருக்கின்றன. இதில், சென்னை-கோவை, சென்னை-பெங்களூரு, சென்னை-டெல்லி இடையே இரட்டை ரெயில் பாதை இருப்பதால், ரெயில்கள் சிக்னலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இதனால், பயணநேரமும் வெகுவாக குறைகிறது. தமிழ்நாட்டில் முக்கியமான வழித்தடமாக கருதப்படுவது சென்னை-கன்னியாகுமரி இடையே 742 கி.மீ. நீளமுள்ள ரெயில் பாதைதான். 1998-ம் ஆண்டு இந்த வழித்தடத்தை இரட்டை பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால், நிலம் கையகப்படுத்துதல், திட்டமதிப்பீடு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பணிகள் மந்தமாக நடந்தது. ஒரு வழியாக, கடந்த 2021-ம் ஆண்டு சென்னை-மதுரை இடையேயான 490 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு இரட்டை ரெயில்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

அதன்பிறகு, மதுரை- நெல்லை, நெல்லை-ஆரல்வாய்மொழி இடையே பணிகள் முடிக்கப்பட்டன. நிறைவாக, ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே தற்போது பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. தென்மாவட்ட மக்களின் 26 ஆண்டுகால கனவும் நனவாகிவிட்டது. இனி இந்த இரட்டை வழித்தடத்தில் ரெயில்களை அதிவேகத்தில் இயக்கமுடியும். பயணநேரமும் வெகுவாக குறையும். கூடுதலாகவும் ரெயில்களை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அனைத்து வழித்தடங்களிலும் இரட்டை ரெயில்பாதைகள் இருப்பதால் பயணிகள் தேவையை கருத்தில்கொண்டு சென்னை-கன்னியாகுமரி, சென்னை-கோவை வழித்தடங்களில் கூடுதல் ரெயில்களை விடவேண்டும்.

'ரெயில் பயணத்திற்கு காத்திருப்போர் இல்லாத நிலையை 5 ஆண்டுக்குள் உருவாக்குவோம்' என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், ரெயில் பயணிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். '2030-ம் ஆண்டுக்குள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். தென்மாநிலங்களில் ஒரு புல்லட் ரெயில் இயக்கப்படும். தூங்கும் வசதிகொண்ட வந்தே பாரத், வந்தே பாரத் மெட்ரோ போன்ற ரெயில்களும் இயக்கப்படும்' என்று கூறியுள்ளார். இந்த ரெயில்களெல்லாம் தமிழகத்தில் இயக்கப்பட 18-வது மக்களவையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களும், தமிழக அரசும் ஜூன் 4-ந்தேதியில் இருந்தே ஓங்கி குரல் கொடுக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்