மராட்டியத்தில் வலுப்பெறும் பா.ஜ.க. கூட்டணி!

பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு கட்சி கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது. மராட்டியத்துக்கு ஒன்று அல்ல, இரண்டு துணை முதல்-மந்திரிகள் கிடைத்து இருக்கிறார்கள்.

Update: 2023-07-04 18:45 GMT

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வானாலும் சரி, எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, எல்லோருடைய பார்வையும் 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கியே இருக்கிறது. இதில் பா.ஜ.க. ஒவ்வொரு மாநிலமாக தன் கணக்குகளை தீவிரமாக போட்டு வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில மாதங்களாகவே, "பா.ஜ.க. நிச்சயமாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவார்" என்று அடித்து சொல்லி வருகிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெறவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் லட்சியம். தேர்தலில் தன் கணக்கை 80-லிருந்துதான் தொடங்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது.

அடுத்து பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு 48 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த தேர்தலில், இங்கு 23 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 18 தொகுதிகளில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வெற்றி பெற்று இருந்தது. சிவசேனா பிளவுபட்ட பிறகு 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மட்டுமே பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நடக்க இருக்கும் தேர்தலில் 45 எம்.பி.க்களுக்கு மேல் மராட்டியத்தில் இருந்து பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க வைத்து இருக்கிறது. தனக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் அப்படியே ஒட்டு மொத்த இடங்களையும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், மராட்டியத்தில் தனது ஆட்டத்தை பா.ஜ.க. தொடங்கி, அதில் முன்னேறியும் வருகிறது. 288 தொகுதிகள் கொண்ட மராட்டியத்தில், கட்சி தாவல் என்பது, "அரசியலில் இது சகஜம்" என்று சொல்லக்கூடிய அளவில், சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க. 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. யாருக்கு முதல்-மந்திரி பதவி என்ற போட்டியில் கூட்டணி முறிந்தது.

அடுத்து பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர். இந்த கட்சியின் தலைவரான 83 வயது சரத்பவாருடைய அண்ணன் மகனான அஜித்பவாருக்கு, அவர் ஆதரவு கொடுக்காததால், அந்த ஆட்சி 3 நாட்கள் மட்டுமே நீடித்தது. அடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர். சிவசேனாவில் ஏற்பட்ட பிளவையடுத்து, அந்த அரசு கவிழ்ந்து, சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று ஆட்சி நடந்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரசில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 36 பேர் அஜித்பவார் தலைமையில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். மேலும், ஒரு துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரும், அவருடன் வந்த எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். 36 மட்டுமல்ல, மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆக, பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு கட்சி கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது. மராட்டியத்துக்கு ஒன்று அல்ல, இரண்டு துணை முதல்-மந்திரிகள் கிடைத்து இருக்கிறார்கள். அஜித்பவார் இப்போது 5-வது முறையாக துணை முதல்-மந்திரி பொறுப்பேற்று, சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்