மினி லாரியில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவி பரிதாப சாவு

மினி லாரியில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-10 18:24 GMT

சேந்தமங்கலம்:

பிளஸ்-1 மாணவிகள்

கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. (விவசாயி). இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் அகிலா (வயது 16). மேல்பூசணி குழிப்பட்டியை சேர்ந்தவர் ரூபிகா (16). இவர்கள் 2 பேரும் முள்ளுக்குறிச்சியில் உள்ள ஜி.டி.ஆர். அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். அகிலா, ரூபிகா தங்கள் பள்ளிக்கு கொல்லிமலையில் இருந்து ராசிபுரத்துக்கு அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி காலை அவர்கள் 2 பேரும் அந்த அரசு பஸ்சை தவற விட்டனர். இதனால் அவர்கள் கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கி காய்கறி பாரம் ஏற்றி சென்ற மினி லாரியில் பின்னால் அமர்ந்து சென்றனர். மினி லாரியை கொல்லிமலை சித்தூர் நாடு ஊராட்சி நரியன்காடு பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (32) ஓட்டி சென்றார்.

படுகாயம்

இந்த மினி லாரி மேல் பூசணிகுழிப்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்த வளைவில் திரும்பியது. அப்போது அதில் அமர்ந்திருந்த அகிலா, ரூபிகா நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அகிலா சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ரூபிகா ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மலைவாழ் மக்கள் விபத்து நடந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி

இந்த விபத்து தொடர்பாக செங்கரை போலீசார் மினி லாரி டிரைவர் சிவப்பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அகிலா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு மினி லாரியில் சென்றபோது தவறி விழுந்த பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்