சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு தகுதி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஸ்வியாடெக் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

Update: 2023-08-19 20:58 GMT

கோப்புப்படம் 

சின்சினாட்டி,

ஜோகோவிச் அசத்தல்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-4 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அவருக்கு இந்த வெற்றியை பெற 61 நிமிடமே தேவைப்பட்டது.

மற்றொரு கால்இறுதியில் 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ் புர்செலை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.

ஹர்காக்ஸ் வெற்றி

மற்ற ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவையும், தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) 6-1, 7-6 (10-8) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்ரினையும் தோற்கடித்தனர்.

அரைஇறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அல்காரஸ்-ஹர்காக்ஸ் ஆகியோர் மோதுகிறார்கள். இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வெல்வதுடன், 'நம்பர் ஒன்' இடத்தில் உள்ள அல்காரஸ் தனது அரைஇறுதியில் தோல்வி கண்டால் ஜோகோவிச் மீண்டும் தரவரிசையில் 'நம்பர் ஒன்' அரியணையை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைஇறுதியில் ஸ்வியாடெக்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவருமான வோன்ட்ரோசோவாவை (செக்குடியரசு) சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஸ்வியாடெக் அரைஇறுதியில் 7-ம் நிலை வீராங்கனையான கோகோ காப்பை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார். கோகோ காப் தனது கால்இறுதி ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) விரட்டியடித்து இருந்தார்.

சபலென்கா

இன்னொரு கால்இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் 5-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா) வீழ்த்தினார். செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா-மேரி போஸ்கோவா இடையிலான மற்றொரு ஆட்டத்தில் கரோலினா முச்சோவா முதல் செட்டில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மேரி போஸ்கோவா போட்டியில் இருந்து விலகினார். இதனால் முச்சோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரைஇறுதியில் சபலென்காவை சந்திக்கிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்