உலக கோப்பை வில்வித்தை போட்டி; இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தல்
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தி உள்ளன.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் 2023, நடந்து வருகின்றன. இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இறுதி போட்டியில் திரில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளன.
இரு அணிகளும் காம்பவுண்டு வில்வித்தை குழு போட்டியில் வெற்றி பெற்றன. இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் டியோடேல், பிரதமேஷ் ஜாக்கர் மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி இறுதி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டி முடிவில், 236-232 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதேபோன்று, அதிதி கோபிசந்த் சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்நீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இறுதி போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், 234-233 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.
இந்த 3 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி, சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்றது.