எனது மகளை கிரிக்கெட் வீராங்கனையாக்கி இருக்க வேண்டும்... மனு பாக்கரின் தந்தை வேதனை

கேல் ரத்னா விருதுக்காக ஆன்லைன் வழியே மனு, விண்ணப்பித்தபோதும், அவருடைய பெயர், விருது பட்டியலில் காணப்படவில்லை என கூறப்படுகிறது.

Update: 2024-12-24 23:13 GMT

புதுடெல்லி,

பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் பங்கேற்று 2 வெண்கல பதக்கங்களை வென்றவர் மனு பாக்கர். இந்நிலையில், விளையாட்டு துறையில் சிறந்த வீரர், வீராங்கனைக்கு அளிக்கப்படும் கேல் ரத்னா விருதுக்கான 30 பேர் கொண்ட பட்டியலில் மனுவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் வருத்தமடைந்த மனு, அவருடைய தந்தையிடம் விரக்தியில் பேசியுள்ளார்.

இதுபற்றி மனுவின் தந்தை கூறும்போது, துப்பாக்கி சுடுதலில் மனுவை பயிற்சி பெற வைத்ததற்காக நான் வருந்துகிறேன். அவரை கிரிக்கெட் வீராங்கனையாக்கி இருக்க வேண்டும். அதன்பின்னர், எல்லா விருதுகளும் பாராட்டுகளும் மனுவை தேடி வந்திருக்கும்.

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை மனு வென்று கொடுத்திருக்கிறார். வேறு ஒருவரும் இதுபோன்று இதற்கு முன்பு செய்தது இல்லை. நாட்டுக்காக எனது மகள் இன்னும் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என வேதனையுடன் கேட்டுள்ளார்.

மனுவின் முயற்சிகளை அரசு அங்கீகரித்தேயாக வேண்டும். மனுவிடம் நான் பேசினேன். அவர் மனமுடைந்து போயிருக்கிறார். அவர், நான் ஒலிம்பிக்கிற்கு போயிருக்க கூடாது. நாட்டுக்காக பதக்கங்களை வென்றிருக்க கூடாது என மனு என்னிடம் கூறினார் என்று மனுவின் தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கேல் ரத்னா விருதுக்காக ஆன்லைன் வழியே மனு, விண்ணப்பித்து இருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், அவருடைய பெயர் விருது பட்டியலில் காணப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். நாட்டின் 3-வது மற்றும் 4-வது உயரிய விருதுகளான பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கும் மனு விண்ணப்பித்து உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்