இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
லக்சயா சென், சிந்து இருவரும் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜகார்த்தா,
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 23-21, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜூங்கை சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து உலகின் 8ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரட்சனோக் 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ரட்சனோக் இன்டனானுக்கு எதிராக பி.வி.சிந்து தொடர்ச்சியாக 5-வது முறை தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென் இந்தியாவின் லக்சயா சென்-னை வீழ்த்தினார். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.